கீழ்வேளூர் பகுதியில் நிவாரணம் கேட்டு நடந்த மறியல் போராட்டத்தில் 300 பேர் கைது

கீழ்வேளூர், ஜன.19: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் 2021 ஜனவரி மாத தொடக்கத்தில் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும்மாக சாய்ந்து தண்ணீரில் மூழ்கி நெற்கதிர்கள் அழுகி முளைத்துள்ளதால பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் கீழ்வேளூர், தேவூர், சாட்டியக்குடி, ஆகிய இடங்களில் நடைபெற்றது. கீழ்வேளூர் கடைத் தெருவில் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமையில் நடைபெற்றது. இதில் 7 பெண்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் கடைத்தெருவில் கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் மாவட்ட குழு உறுப்பினர் அபுபக்கர் தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டம் 12 பெண்கள் உள்ளிட்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர். சாட்டியக்குடி கடைத் தெருவில் மாவட்ட குழு உறுப்பினர் அம்பிகாபதி தலைமையில் நடந்த சாலை மறியல் போராட்டம் 28 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். தலைஞாயிறு ஒன்றியம் கொளப்பாட்டில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சுப்பரமணியன் தலைமையில் 3 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர். கீழையூர் ஒன்றியத்தில் திருக்குவளை கடைத் தெருவில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 5 பெண்கள் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். மேலப்பிடாகை கடைத்தெருவில் நடைபெற்ற சாலை மறியலில் 15 பெண்கள் உள்ளிட்ட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>