குடியிருக்கும் வீட்டை காலி செய்ய கூறி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் முதியவர் சப்.கலெக்டரிடம் கோரிக்கை

குளித்தலை, ஜன. 19: குடியிருக்கும் வீட்டை காலி செய்ய கூறி அடித்து துன்புறுத்தும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் குளித்தலை சப்.கலெக்டரிடம் மனு அளித்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஆர் டி மலை கிராமம் நாவல் நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம்( 72). இவர் தனது இரண்டாவது மனைவி சரசுவுடன் குளித்தலை சப்.கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் மூத்த குடிமகன் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்படி பாதுகாப்பு வேண்டி கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: ஆர்டி மலை கிராமம் நாவல் நாயக்கம்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து விவசாயம் தொழில் செய்து வருகிறேன். என் முதல் மனைவி மாரியாயி இறந்து விட்டார். என் முதல் மனைவி மூலம் பிறந்த சுப்பிரமணி, லட்சுமி, அமுதா ஆகிய மூன்று பிள்ளைகளையும் வளர்த்து பராமரிப்பதற்காக இரண்டாம் தாரமாக சரசு என்பவரை திருமணம் செய்து கொண்டேன்.

இரண்டாம் தாரம் மூலம் சங்கீதா, சுகன்யா, சரண்யா ஆகிய பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அவர்கள் அனைவரும் தனித்தனியே குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எனக்கு சுயமாக பாத்தியப்பட்ட நிலம் மற்றும் வீடுகள் உள்ளன .இரண்டு வீடுகளில் மெத்தை வீட்டை என் மகன் சுப்பிரமணியனுக்கு கொடுத்துவிட்டேன். ஓட்டு வீட்டில் நானும் என் இரண்டாவது மனைவி சரசுடன் வசித்து வருகிறேன். வீட்டுமனை களையும் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டேன். நிலத்தை விற்று கடனை கட்டி விட்டோம். இந்நிலையில் குடியிருக்கும் ஓட்டு வில்லை வீட்டிலிருந்து எங்களை வெளியேறச் சொல்லி அடித்து உதைத்து எனது மகன் சுப்ரமணியன் துன்புறுத்தி வருகிறான். ஊரில் முக்கியஸ்தர்களை வைத்து சமரசம் செய்து பார்த்தோம். அதற்கு எங்களை பயமுறுத்தி வருகிறார்.

தோகமலை காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை அதனால் வயது முதிர்ந்த காலத்தில் எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். ஆகவே சார் ஆட்சியர் எனது மகன் சுப்பிரமணி, மருமகள் கருப்பாயி ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்.கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். முதியவர்கள் கண் கலங்கியவாறு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.

Related Stories: