×

விரைந்து அகற்ற வலியுறுத்தல் புள்ளம்பாடி ஒன்றிய பகுதியில் தொடர் மழை 30,000 ஏக்கரில் மக்காச்சோளம், பருத்தி அழுகியது

லால்குடி, ஜன. 17: புள்ளம்பாடி ஒன்றிய பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்கள் அழுகியது. இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் பெருவளப்பூர், சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், மால்வாய், கண்ணனூர், மேலரசூர், கீழஅரசூர், நம்புக்குறிச்சி, பெரிய குறுக்கை அகரம், நெய்குளம், நெடுங்கூர், ஊட்டத்தூர், ரெட்டிமாங்குடி, தெரணிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 30,000 ஏக்கர் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், 8,000 ஏக்கர் நிலங்களில் பருத்தி பயிரிடப்பட்டு வந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பகுதியில் 30,000 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் சில பகுதியில் பூ பூத்தும், சில பகுதியில் பூப்பூத்து முற்றும் நிலையிலும் இருந்து வந்தது. ஆனால் சரியான மழை இல்லாததால் கடுமையான வெப்பத்தால் செடிகள் கருக துவங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையாலும், பலத்த காற்றாலும் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து அழுக தொடங்கியது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்காச்சோள பயிர்கள் முற்றிலுமாக ஒடிந்து சாய்ந்துள்ளது. இதில் 80 சதவீதம் முழுமையாக பாதிக்கப்பட்டு விளைந்த மக்காச்சோளம் முளைக்க துவங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. 8,000 ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்துள்ள பருத்தி சில இடங்களில் காய்களாகவும், சில பகுதியில் காய்கள் முற்றி காணப்பட்டு வந்தது. தற்போது பெய்து வரும் மழையால் பருத்தி காய்களும், பிஞ்சுகளும் அழுகி விட்டது. இதனால் பருத்தி விவசாயம் செய்யபட்ட நிலங்கள் முற்றிலுமாக. பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மக்காச்சோள விவசாயிகள் கூறுகையில், மக்காச்சோள பயிர்கள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். பயிர் காப்பீடு செய்துள்ளோம். ஆனால் பயிர் காப்பீடு தொகை கிடைக்க பல மாதங்களாக காத்திருக்க வேண்டும். எனவே எங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். இதுகுறித்து பருத்தி விவசாயிகள் கூறுகையில், பருத்தி பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பருத்தி விவசாயிகள் முற்றிலுமாக பயிர் காப்பீடு செய்யாததால் வருவாய், வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Tags : removal ,Pullambadi Union Territory ,
× RELATED உள்நாட்டு விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்