×

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 15,000 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது 1500 ஏக்கர் கடலை பயிரும் பாதிப்பு

நீடாமங்கலம், ஜன.17: நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மற்றும் 1,500 ஏக்கர் கடலை மழை நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் நிவர் புயல், புரெவி புயல் ஏதிரொலியால் பெய்த கனமழையில் அன்னவாசல் காணூர், பருத்திக்கோட்டை, பூவனூர், ஒளிமதி, அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நெற் கதிர்கள், 1500 ஏக்கர் கடலையும் தற்போது பெய்து வரும் மழை நீரில் மூழ்கியுள்ளது. தற்போது மழைநீரில் மூழ்கிய நெல் மணிகள் முளைக்க துவங்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் 1,500 ஏக்கர் கடலை பயிர்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் நெல் பயிருக்கு செலவு செய்தோம். இதை நம்பி மகள், மகன் படிப்புக்கும் கடன் வாங்கியுள்ளோம். பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பது, கடன் நகைகளை எப்படி மீட்பது என்று தெரியவில்லை. மேலும் வயலில் மூழ்கியுள்ள பயிர்களை இனிமேல் அறுவடை செய்யமுடியாது. எனவே அரசு ஏக்கருக்கு செலவு செய்த முழு தொகையையும் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றனர்.

Tags : paddy fields ,area ,Needamangalam ,
× RELATED புவி வெப்பமயமாதலை தடுக்க அதிக அளவில்...