திருவாரூர் மாவட்டத்தில் சிறுதானியங்கள் பயிரிட விவசாயிகளுக்கு அழைப்பு

திருவாரூர், ஜன.17: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிறுதானிய சாகுபடி என்பது பன்னெடுங்காலமாக காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளால் கடைபிடிக்கப்பட்டாலும் கடந்த 50 ஆண்டுகளாக நெல் சாகுபடி 3 போகங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் சிறு தானிய சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர். பல சமயங்களில், குறிப்பாக கோடை மாதங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு, நெல் பயிரிட முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆகவே, காவேரி டெல்டா விவசாயிகளை சிறு தானியசாகுபடிக்கு ஆற்றுப்படுத்த, மாநில சமச்சீர் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் காவேரி டெல்டா மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தியை மீள்கொணர்தல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் என்ற தலைப்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சமீப காலமாக, சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்து அதற்கான சந்தை விரிவடைந்து வருகிறது. எனவே, சிறுதானிய உற்பத்தியினை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இந்த சிறுதானிய உற்பத்தித் தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்புக் கூட்டல் தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சிகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டு சிறு தானிய உற்பத்தி செய்திட ஊக்கப்படுத்துகின்ற வகையில் சிறுதானிய பயிர்களில் புதிய புதிய இரகங்களை விவசாயிகளுக்கு வழங்கி அப்பயிர் வளர்ச்சிக்கு தேவையான இடுபொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே குறுகிய காலத்தில் அதிக இலாபம் தரும் சிறுதானிய உற்பத்தியை திருவாரூர் மாவட்டத்தில் ஊக்குவிக்கும் வகையில் இந்த பயிர்களை பயிரிட விவசாயிகள் முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: