திருவாரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது

திருவாரூர், ஜன.17: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உட்பட 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் ஆகஸ் போர்டு அஸ்டிரா ஜெனிகா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி களுக்கு மத்திய அரசின் சுகாதாரத் துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டு கடந்த 2ம் தேதி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒத்திகை நடைபெற்றது.

இதனையொட்டி மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் போன்றவர்களுக்கு இந்த தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி 2ம் கட்ட ஒத்திகை கடந்த 8ம் தேதி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உட்பட மொத்தம் 5 இடங்களில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 ஆயிரத்து 897 மருத்துவ பணியாளர்களில் முதல்கட்டமாக 125 பேருக்கு இந்த தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பின்னர், பின் விளைவுகள் ஏற்படாத நிலையில் இந்த கொரோனா தடுப்பூசியினை போட்டு கொள்வதற்கு சுய விருப்பத்தின் பேரில் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்துள்ள முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் நாடு முழுவதும் துவங்கியது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், பெரும்பண்ணையூர் ஆரம்ப சுகாதார நிலையம் என 5 இடங்களில் இந்த பணியானது துவங்கியுள்ளது. இதனையொட்டி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பணியினை மாவட்ட எஸ்பி துரை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ பொன்னம்மாள், மருத்துவக் கல்லூரி டீன் முத்துக்குமரன், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் அன்சாரி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்ட தலைமை மருத்துவமனையான மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியினையடுத்து முதல் ஊசியினை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் போட்டுக்கொண்டு துவக்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் 400 பேருக்கு 117 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Related Stories:

>