தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி

தஞ்சை, ஜன.17: தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கும்பகோணம் அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை, பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறையின் சார்பில் முதற்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுகொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. டீன், டாக்டர்கள், செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொரு முகாமிலும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்றைக்கு(நேற்று) 400 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக மாவடடத்தில்13,964 பணியாளர்களை தேர்வு செய்துள்ளோம். இவர்களுக்கு படிப்படியாக கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும்.

நமது மாவட்டத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசி 15,500 தவணைகளும், கோவாக்சின் தடுப்பூசி 2,100 தவணைகளும் என மொத்தம் 17,600 தவணைகள் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது எந்தந்த பகுதிகளுக்கு தேவைப்படுகிறதோ அங்கு சிறப்பு முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும். அனைத்து முகாம்களுக்கும் போதுமான அளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை அரசுக்கு மட்டும் சப்ளை செய்யப்படுகிறது. இனிமேல் அரசின் வழிகாட்டுதலின்படி தான் செயல்பட முடியும். அனுமதியின்றி, சட்டவிரோதமாக யாராவது செயல்படுகிறார்களா என கண்காணிக்கப்படும். அப்படி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 17 ஆயிரம் முன்கள பணியாளர்களை கண்டறிந்துள்ளோம். ஒரே நேரத்தில் எல்லோருக்கும் தடுப்பூசி போட முடியாது. அதனால் தான் ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு என முடிவு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தேதி வாரியாக முகாம் நடத்தப்பட்டு, அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றார். இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருது துரை, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராமு, துணை இயக்குனர் ரவீந்திரன் , தஞ்சாவூர் கோட்டாட்சியர் வேலுமணி மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

Related Stories: