சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு ஜெயங்கொண்டம் அருகே மழையில் மூழ்கிய நெல், கடலை, சம்மங்கி பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

ஜெயங்கொண்டம், ஜன.17: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி, கடாரங்கொண்டான், ஆயுதகளம் , உட்கோட்டை, இடைக்கட்டு, கொக்கரனை தொட்டிக்குளம், யுத்தப்பள்ளம், குருவாலப்பா கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், கடலை, சம்மங்கி, மிளகாய், துவரை, காய்கறிகள் என பல்வேறு பயிர்கள் பொன்னேரி பாசனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில் தற்போது பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெல் மணிகள் நீரில் மூழ்கியும், சில வயல்களில் நெற்பயிர்கள் முளைத்தும் சம்மங்கி,கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களும் கருகியும், கடலைகள் முளைக்காமலும் வீணாகி உள்ளது. இதனை அதிகாரிகள் சரியாக முறையான கணக்கெடுத்து ஏக்கருக்கு 40 - 50 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு, புரெவி மற்றும் நிவர் புயல், வளிமண்டல காற்றழுத்த மழை என பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருவதால் இந்த பொங்கல் பண்டிகையை போது திருவிழாவானது எங்களுக்கு வெறும் விழாவானது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே டெல்டா மாவட்டங்களை மட்டும் பார்வையிடுவது அதிகாரிகள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அதனை விடுத்து எங்களை போன்ற மழை மற்றும் பொன்னேரி பாசனம் மூலம் விவசாயம் செய்து வரும் தங்கள் நிலங்களையும் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: