கொள்ளிடம் அருகே கீரங்குடி சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நிறுத்தம்

கொள்ளிடம், ஜன.17: கொள்ளிடம் அருகே கீரங்குடி சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து கீரங்குடி வழியாக மாதிரவேலூர் செல்லும் சின்னசாலை மிகவும் மோசமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மழை காரணமாக சாலை மேலும் மோசமடைந்து பல இடங்களில் பள்ளங்கள் உருவாகி இருப்பதால்தண்ணீர் தேங்கிகுளம் போல் காட்சியளிக்கின்றன. இதனால் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலை வழியாக செல்ல முடியாமல் வேறு சுற்று வழி பாதையில் சென்று வருகின்றனர்.

சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் அதிகம் தேங்கி நிற்பதால் சீர்காழியிலிருந்து புத்தூர் வழியாக ஒரு நாளைக்கு 8 முறை சிதம்பரநாதபுரம், மடப்புரம், ஆனந்தக்கூத்தன், கீரங்குடி வழியாக, மாதிரிவேலூர் சென்று வரும் மினிபஸ் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலையில் பல இடங்களில் குளம்போல் தேங்கியுள்ள மழை நீரை வடியவைக்கும் பணியில் மாதிரவேலூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சமூக அக்கறையுடன் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று தினங்களாக சின்ன சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு வசதி இல்லாத நிலையில் உள்ள சின்ன சாலையை உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>