மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதால் ஈரப்பதத்தில் தளர்வு அறிவித்து அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்

கிராமமக்கள் அவதி

நாகை, ஜன.17:அறுவடை நேரத்தில் பெய்து வரும் கன மழையால் நெல்மணிகள் முளைத்தும், முளைக்கும் அபாயத்தில் உள்ளதால் ஈரப்பதம் அளவில் தளர்வு அறிவித்து அனைத்து நெல்களையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் நாகையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்டா பகுதியை சேர்ந்த நாகை மாவட்டம் டெல்டாவின் கடை கோடி பகுதி. இங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த நெல் விவசாயம் ஏற்கனவே நிவர், புரெவி புயலின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை அடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அதி.மு.க. அரசு விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வழி வகை செய்யாமல் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என அறிவித்து விட்டு அதிலும் சதவீத அடிப்படையில் இந்த நிவாரணம் கொடுக்கும்போது விவசாயிகளுக்கு முழு நிவாரணமாக அமையவில்லை.

அதோடு இப்போது பெய்கின்ற கன மழை காரணமாக நாகை, கீழ்வேளூர், வேதாரண்ம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து விவசாய பகுதிகளும் நீரில் மூழ்கி விளைந்துள்ள நெல் மணிகள் அறுவடை காலத்தில் கனமழை காரணமாக விளைந்துள்ள நெல் மணிகள் முளைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. ஏற்கனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது போல ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்தை வழங்க வேண்டும். தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என்று நிவாரணம் அறிவித்து, அதிலும் சதவீத அடிப்படையில் நிவாரண தொகை என்று அறிவித்துள்ளதால் விவசாயிகள் பாதித்துள்ளனர். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் பயிர்காப்பீட்டை நம்பியுள்ளனர். மேலும் ஒரு ஏக்கருக்கு ரூ.32 ஆயிரம் காப்பீடு என்ற அளவில் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு விவசாயிகளுக்கு நெல்காப்பீடு தொகை முழுமையாக வழங்கிட வேண்டும். மேலும் நீரில் நெல்பயிர்கள் மூழ்கியுள்ளதால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் அறுவடை செய்யும் அனைத்து நெல்களையும் ஈரப்பதம் அளவில் தளர்வு அறிவித்து அறுவடை செய்யப்படும் அனைத்து நெல்களையும் முழுமையாக கொள்முதல செய்திட வேண்டும். இவ்வாறு நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் கூறினார்.

Related Stories: