கொள்ளிடம் அருகே மாடுகளை ஓட்டி வர ஆற்றை கடந்தவர் மாயம்

கொள்ளிடம், ஜன.17: கொள்ளிடம் அருகே மாதிரவேலூரில் மாடுகளை ஓட்டி வர ஆற்றைக் கடந்த முதியவர் மாயமானார். அவரை தேடும்பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேலூர் கிராமம் மேலதெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (65), விவசாய கூலிதொழிலாளி. ராமபக்தர். இவருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள், ஒரு கன்று ஆகியவைகளை கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் வழக்கம்போல மேய்ந்து வருவதற்காக நேற்றுமுன்தினம் காலை ஓட்டி அனுப்பி வைத்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாட்டுப் பொங்கலை கொண்டாடுவதற்காக மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை அழைத்து வருவதற்காக நேற்றுமுன்தினம் பகல் ஒரு மணிக்கு மாதிரவேலூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி சென்றார். ஆனால் கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் மாடுகளை ஓட்டி வர ஆற்றில் இறங்கிசென்ற மாரிமுத்து திரும்பி வரவில்லை.

மாட்டுப் பொங்கலுக்கு மாடுகளும் வரவில்லை. நேற்று காலை வரை மாரிமுத்து வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை ஊர் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாரிமுத்துவின் மகன் சேகர் (40) கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மாரிமுத்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>