×

சாத்தூர் வைப்பாற்றில் 200 ஆண்டுகளாக நடந்து வந்த மணல் மேட்டு திருவிழாவுக்கு தடை பொதுமக்கள் ஏமாற்றம்

சாத்தூர், ஜன. 17: சாத்தூர் வைப்பாற்றில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த மணல் மேட்டு திருவிழாவிற்கு கொரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து போயினர். சாத்தூரில் காணும்பொங்கல் அன்று வைப்பாற்றில் நடக்கும் மணல் மேட்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 200 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இத்திருவிழாவில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆடிப்பாடி மகிழ்வது வழக்கம். அதேபோல் கடந்த காலங்களில் இந்த மணல் மேட்டு திருவிழாவை ஒட்டி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் குடும்பத்தினர் தங்களுடைய பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் வைபங்களும் நடைபெற்று வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வேலைக்காக வெளியூரில் தங்கியுள்ள குடும்பத்தினர்,  சென்றுள்ள இளைஞர்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்களுடைய உறவினர்கள், நண்பர்களை சந்திக்கும் நிகழ்வாகவும் இந்த திருவிழா பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கெரோனா பரவல் காரணமாக நேற்று நடைபெறவிருந்த மணல் மேட்டு திருவிழாவிற்கு நகராட்சி, காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் சுமார் 10 ஆயிரம் பேர் கூடும் வைப்பாறு நேற்று களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டது. 200 ஆண்டுகள் நடந்து வந்த மணல் மேட்டு திருவிழா நடைபெறாமல் போனதால் இப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

Tags : Sand Hill Festival ,public ,Sattur ,
× RELATED விஷால் நடிப்பில் உருவான சக்ரா...