பிளவக்கல் அணையில் கூடுதல் நீர் திறப்பு 100 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின விவசாயிகள் கவலை

வத்திராயிருப்பு, ஜன. 17:  பிளவக்கல் அணையில் கூடுதல் நீர் திறப்பால் சுமார் 100 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வத்திராயிருப்பு அருகேயுள்ளது பிளவக்கல் பெரியார் அணை. இதன் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 13ம் தேதி இரவு பெய்த பலத்த மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3200 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இதையடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த அதிகளவு தண்ணீர் வெளியேற்றத்தால் கூமாபட்டியில் இருந்து அணை செல்லும் வழியில் உள்ள ரஹ்மத் நகர் பாலத்தின் மேலே தண்ணீர் சென்றது. வரத்து கால்வாயை தாண்டி வந்த இந்த தண்ணீர் அருகிலுள்ள நிலங்களில் புகுந்தது. இதனால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழகி சாய்ந்தது.

மேலும் பாலத்தின் அடியில் மண்ணரிப்பு ஏற்பட்டு சேதமடையும் நிலையில் உள்ளது. இதன் மேல் வாகனங்கள் சென்றால் பாலம் இடியும் நிலை அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலத்தில் தண்ணீர் செல்வதை பார்க்க ஏராளமானோர் கூடி வருவதுடன் ஆபத்தான முறையில் செல்பி எடுத்தும் வருகின்றனர். எனவே போலீசார் பாலத்தில் வாகனங்கள், பொதுமக்கள் செல்ல பாதுகாப்பு வேலி அமைத்து தடை விதிப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: