×

விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது முதல் நாளில் 180 பேருக்கு செலுத்தப்பட்டது

விருதுநகர், ஜன. 17: விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதல் நாளில் 180 பேருக்கு செலுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் முதல்கட்டமாக விருதுநகர் சுகாதார மாவட்டத்திற்கு 3320, சிவகாசி சுகாதார மாவட்டத்திற்கு 6400 என மொத்தம் 9720 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்து வந்துள்ளன. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, திருச்சுழி எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம், சிவகாசி அரசு மருத்துவமனை, குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையம், எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை ஆகிய 7 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணிகளை கலெக்டர் கண்ணன் பார்வையிட்டார். ஒவ்வொரு மையத்திலும் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி வரத்து குறைவால் முதல்கட்டமான விருப்பம் தெரிவித்து பதிவு செய்த தன்னார்வலர்களுக்கு போடப்படுகிறது. நேற்று விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 102 பேர், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 78 பேர் என 180 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள் 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டும். இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு இரு வாரங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதில் டாக்டர்கள் பழனிச்சாமி, அன்புவேல், அரவிந்த்பாபு மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Corona ,centers ,Virudhunagar district ,
× RELATED கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கம்