சிவகங்கை மருத்துவக்கல்லூரி டீனுக்கு முதல் தடுப்பூசி

சிவகங்கை, ஜன. 17: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா முதல் தடுப்பூசியை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் போட்டுக்கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக 10 ஆயிரத்து 700 கொரோனா (கோவிட்) தடுப்பூசி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் மருத்துவப்பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது. இத்தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவப்பணியாளர்கள் 9ஆயிரத்து 928பேர் பேர் பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி போடும் மையங்களாக ஆயிரத்து 181 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நேற்று சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். முதல் தடுப்பூசியை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் போட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன், துணை இயக்குநர்கள் யசோதாமணி, யோகவதி மற்றும் அரசு மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: