கஞ்சா விற்ற சிறுவன் கைது

மதுரை சோலையழகுபுரம் சத்துணவு மையம் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த  தகவலின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் எஸ்ஐ சோமசுந்தரம் உள்ளிட்ட போலீசார் அங்கு  சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சோலையழகுபுரம் ராமமூர்த்தி நகர்  3வது தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் கஞ்சா விற்றது தெரிந்தது. இதையடுத்து  போலீசார் சிறுவனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நண்பரை பார்க்க சென்றவர் மாயம்

மதுரை மகபூப்பாளையம் அன்சாரி நகரை சேர்ந்தவர் சையது அலி (40). இவர் கடந்த 11ம் தேதி தனது நண்பரை பார்த்து விட்டு கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மனைவி அசின்பானு அளித்த புகாரில் எஸ்எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

நோய் கொடுமையால் தற்கொலை

மதுரை பெத்தானியாபுரம் ஐன்டியுசி காலனியை சேர்ந்தவர் சார்லஸ் (35). நீண்டகாலமாக நோய்வாய்பட்டிருந்த இவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து கடந்த 4ம் தேதி விஷம் அருந்திய இவரை மதுரை ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 15ம் தேதி சார்லஸ் உயிரிழந்தார். தாயார் தனலட்சுமி புகாரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

மதுரை கீரைத்துரை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கணேசன் மகள் காயத்ரி (19). நர்சிங் கல்லூரி மாணவி. கடந்த 14ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கீரைத்துரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கிணற்றில் குதித்து சிறுமி தற்ெகாலை

உசிலம்பட்டி அருகே வடுகபட்டியை சேர்ந்த சேகர் மகள் நித்யா (15), 10ம் வகுப்பு மாணவி. இவர் நேற்று தனது கையில் போட்டிருந்த தங்க மோதிரத்தை தொலைத்து விட்டதாகவும், இதுகுறித்து பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நித்யா ஊர் அருகே தண்ணீர் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்தார். உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

அணையில் மூழ்கி வாலிபர் பலி

எம்.கல்லுப்பட்டி அய்யனார்புரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர் நேற்று முன்தினம் அய்யனார் அணையில் சக நண்பர்களுடன் குளிக்க சென்றர். அப்போது நண்பர்கள் அணையில் நீந்தி அக்கரையை கடக்கவே, கருப்பசாமியும் கடக்க முயன்றார். அப்போது கருப்பசாமிக்கு அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார். அன்று இரவு நேரம் ஆகிவிட்டதால் சடலத்தை மீட்க முடியவில்லை. நேற்று காலை தீயணைப்பு துறையினர் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். எம்.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

குடி போதையில் சாவு

திருமங்கலம் அருகே மறவன்குளம் பஸ்ஸ்டாப்பில் நேற்று முதியவர் ஒருவர் குடிபோதையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.  மதியம் 3 மணியளவில் மயங்கிய நிலையிலே அவர் உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் உடலை மீட்டு ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்ததில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த பரமசிவம் (65) என்பது தெரிந்தது.

சூதாடிய 9 பேர் கைது

மதுரை விஸ்வநாதபுரம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சூதாட்ட கிளப் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தல்லாகுளம் எஸ்ஐ கார்த்திக் உள்ளிட்ட போலீசார் அங்கு கண்காணித்து வந்தனர். இதில் ரிசர்வ்லைன் காலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடத்தி வந்தது தெரிந்தது. போலீசார் உள்ளே நுழைந்ததும் சிலர் தப்பியோட முயன்றனர். எனினும் போலீசார் சுற்றிவளைத்து சூதாடிய 9 பேரை கைது செய்ததுடன், ரொக்கம் 5,495ஐ பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>