வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு தூய்மை பணிக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.500 ஒதுக்கீடு

மதுரை, ஜன. 17 : கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மதுரையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.500 தூய்மை பணிக்கென நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொங்கலுக்கு பின்னர் நாளை மறுநாள் (ஜன.19ம் தேதி) 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் 539 பள்ளிகள் உட்பட 6,173 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.30 லட்சத்து 86 ஆயிரத்து 500மும், 31,297 அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1.56 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல், மதுரை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகள் உள்ளது. இந்த விடுதிகளும் கடந்த 9 மாதமாக திறக்கப்படாததால் அரசி, பருப்பு, எண்ணெய் உட்பட பல வகையான பொருட்கள் காலாவதியாகி விட்டன. இதனை அதிகாரிகள் அகற்றி விட்டு, புதிய பொருட்கள் இறக்குமதி செய்துள்ளனர். மேலும் விடுதியில் சமூக இடைவெளி, கைகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Related Stories:

>