×

பழநி அருகே பெரியகலையம்புத்தூர் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர் 20க்கும் மேற்பட்டோர் காயம்

பழநி, ஜன. 17: பழநி அருகே, பெரியகலையம்புத்தூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில், 600க்கும் மேற்பட்ட காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். பழநி அருகே, நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் பெரியகலையம்புத்தூர் கிராமம் உள்ள. இங்குள்ள ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் சார்பில் கமிட்டி சார்பில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று பெரியகலையம்புத்தூரில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது. பழநி கோட்டாட்சியர் அசோகன் தலைமை வகித்தார். பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் வடிவேல் முருகன் கால்நடை மருத்துவர்கள், விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காணித்தனர்.

டிஎஸ்பி சிவா தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பார்வையாளர்கள் மைதானத்திற்குள் புகுந்து விடாதபடி இரும்பு வலைகள் பொருத்திய 2 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மாடுபிடி வீரர்கள் மருத்துவக்குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 3 பிரிவுகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பழநியில் மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடப்பதால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. ஜல்லிக்கட்டு விழாவிற்கு பழநி, ஒட்டன்சத்திரம், உடுமலை, தாராபுரம், தேனி, மதுரை, கோவில்பட்டி, வாடிப்பட்டி, நிலக்கோட்டை, உசிலம்பட்டி, காங்கேயம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளை வெளியே வந்தது. இதனைத்தொடர்ந்து மற்ற காளைகள் அனுமதிக்கப்பட்டன. காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், கட்டில், பீரோ, சைக்கிள், பேன், மிக்சி, கிரைண்டர், மின்சார அடுப்பு, காஸ் அடுப்பு, சோபா, சில்வர் பாத்திரங்கள் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன. மாடுகளின் கொம்புகளை பிடிக்கக் கூடாதென போட்டியினரால் அறிவுறுத்தப்பட்டது. மாடுகளை பிடிக்கும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மைதானத்திற்கு அருகிலேயே மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று மாலை வரை ஜல்லிக்கட்டு விழா நடந்தது.

Tags : bulls ,Periyakalayambuthur Jallikkat ,Palani ,
× RELATED சிவகங்கையில் நடத்தப்பட்ட...