×

திருநின்றவூர் ரவுண்டானாவில் அகலத்தை குறைக்காததால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஆவடி: திருநின்றவூர்- பெரியபாளையம் சாலையில் உள்ள ரவுண்டானவின் அகலத்தை குறைக்காததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் பல ஆண்டாக நடவடிக்கை  எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருநின்றவூர்- பெரியபாளையம் சாலையில் மேம்பாலம் அருகில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டானா கடந்த 12ஆண்டுகளுக்கு முன்பு திருநின்றவூர் மேம்பாலம் அமைக்கும் போது கட்டப்பட்டது. இச்சாலை வழியாக நத்தமேடு, நடுகுத்தகை, பாக்கம், மேல்கொண்டயார், வெங்கல், தாமரைப்பாக்கம், புலியூர், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரலாம். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

குறிப்பாக, பெரியபாளையத்தில் அம்மன் கோயிலுக்கும் இச்சாலையை பயன்படுத்திய தான் சென்னை மற்றும் புறநகர் பகுதியான ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பாதாகை, பட்டாபிராம், வேப்பம்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த மக்கள் அடிக்கடி சென்று வருவார்கள். இச்சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா அதிக அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இரு புறமுள்ள சாலை தலா 7அடி அகலம் கொண்டதாக இருக்கிறது. இதன் வழியாக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் ஒரு பஸ் அல்லது லாரி சென்றால், மற்றொரு வாகனம் அதை முந்தி செல்ல முடியாது. அப்படி செல்லும் பட்சத்தில் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும், ரவுண்டானாவை ஆக்கிரமித்து ஆட்டோக்கள், கார்கள், லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால், இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதோடு மட்டுமில்லாமல், ரவுண்டானாவில் அடிக்கடி அரசியல் கட்சிகளின் பேனர்களை வைத்து விடுகின்றனர். இதனால் ரவுண்டானாவில் இரு புறமும் வாகனங்கள் வருவது தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகினறனர். மேலும், அதே பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் ரவுண்டானாவை சுற்றி வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.  
இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனித்து திருநின்றவூர்- பெரியபாளையம் சாலையில் உள்ள ரவுண்டானாவில் அகலத்தை குறைத்து போக்குவரத்து நெரிசலையும், விபத்தையும்  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றன.

Tags : Motorists ,Thiruninravur ,
× RELATED திருநின்றவூர் ரவுண்டானாவில் அகலத்தை...