மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்த சாலைகள்: மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மின் விளக்குகள் 3 மாதமாக சரிவர எரியவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியின் 15 வார்டுகளில், சுமார் 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இதில், 11வது வார்டு திருக்குளத் தெருவில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தெருவில் உள்ள மின் விளக்குகள் கடந்த 3 மாதமாக சரிவர எரியாமல் உள்ளன. இதனால், வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் பெண்கள், முதியோர் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இருள் சூழ்ந்துள்ள பகுதியில், சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்ல அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால் வழிப்பறி, கொள்ளை, பாலியல் சில்மிஷங்கள் உள்பட பல்வேறு சம்பவங்கள் நடக்கும் சூழல் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தயங்குகின்றனர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை, பொதுமக்கள் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சிய போக்கில் உள்ளனர் என குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் தெருவில் கடந்த 3 மாதமாக மின் விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுபற்றி புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டும் காணாதது போல் மெத்தனமாக உள்ளனர். பொதுமக்களுக்காக வேலை செய்ய வரும் அதிகாரிகள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டால், நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது என தெரியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பொதுமக்களின் நலன்கருதி, மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றனர்.

Related Stories:

>