×

காணும் பொங்கல் கொண்டாட்டம் தடையை மீறி ஈசிஆருக்கு திரண்டு வந்த பொதுமக்கள்: வெறிச்சோடிய மாமல்லபுரம் சுற்றுலா தலம்

திருப்போரூர்: காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக, நேற்று தடையை மீறி ஏராளமான மக்கள் கூட்டம் ஈசிஆர் சாலையில் குவிந்தது. ஆனால், அரசின் தடையால், மாமல்லபுரம் சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கல் திருவிழாவின் 3 நாளான காணும் பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் சுற்றுலாத்தலங்கள், கோயில்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி, இந்தாண்டு வழக்கம்போல் அதிகாலை முதலே சென்னையை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில், ஏராளமான மக்கள் குவியத் தொடங்கினர். காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் கோவளம், மாமல்லபுரம் கடற்கரை, முட்டுக்காடு படகுத்துறை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்திருந்தது. ஆனாலும், ஆயிரக்கணக்கான மக்கள் பைக், கார், வேன் என பல்வேறு வாகனங்கள் வந்ததால், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடற்கரை பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லாததால் மாட்டு வண்டி, லோடு ஆட்டோ, மினி வேன் ஆகிய வாகனங்களில் குடும்பமாக வந்தவர்கள் கோவளம் தர்கா, மாதாகோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில், திருப்போரூர் கந்தசாமி கோயில், கிருஷ்ணன்காரணை சாய்பாபா கோயில், புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயில் ஆகிய இடங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவளத்தில் பலரும் போலீசாரின் எச்சரிக்கை மற்றும் தடுப்புகளை மீறி கடற்கரை பகுதிக்கு செல்ல முயன்றனர். அவர்களை, போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். ஆனாலும், யாரேனும் அலையில் சிக்கினால் காப்பாற்றும் வகையில் தீயணைப்பு வீரர்களும், மீனவர்களும் கடலோரப் பாதுகாப்புப் படை போலீசாருடன் இருந்தனர். மேலும் நீரிலும், கடற்கரை மணலிலும் செல்லும் நவீன வாகனமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர்கள் கேளம்பாக்கம் ராஜாங்கம், தாழம்பூர் கோவிந்தராஜ், திருப்போரூர் கலைச்செல்வி ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இந்தாண்டு பயணிகள் கூடவும், புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க 3 நாட்கள் தமிழக அரசு தடை விதித்தது. அந்த தடை நேற்றோடு முடிந்தது. இதையொட்டி, ஏஎஸ்பி சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர்கள் மாமல்லபுரம் வடிவேல்முருகன், திருக்கழுக்குன்றம் முனிசேகர் மற்றும் போலீசார் மாமல்லபுரம் நுழைவாயில் மற்றும் பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் உள்ளே செல்லாதவாறு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

ஒரு சிலர் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறினர். அவர்களிடம், போன் செய்து உறவினர்களை இங்கே வந்து, அழைத்து செல்லும்படி பேச செய்தனர். ஆனால் யாரும் வராததால், ஆத்திரமடைந்த போலீசார், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கடுமையாக எச்சரித்தனர். சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால், மாமல்லபுரம் முழுவதும் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வராததால் கடற்கரை கோயில் செல்லும் வழியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

Tags : Public ,ECR ,celebrations ,Pongal ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...