×

மாவட்டத்தில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி அமைச்சர் தொடங்கி வைத்தார்

நாமக்கல்,  ஜன.17: நாமக்கல் மாவட்டத்தில் 3 மையங்களில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி  போடும் பணிகளை, நேற்று சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தொடங்கி வைத்தார். நாமக்கல்  மாவட்டத்தில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ராசிபுரம்  மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முன்னதாக 8,700 டோஸ் மருந்துகள் மூன்று  மையங்களிலும் சேமித்து வைக்கப்பட்டது. நேற்று நாமக்கல் அரசு  மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை  தாங்கினார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா துவங்கி வைத்து பார்வையிட்டார்.  இதில் துணை இயக்குனர் சோமசுந்தரம், இணை இயக்குநர் சித்ரா,  மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி மற்றும் அதிகாரிகள் கலந்து  கொண்டனர்.

முகாமில் முதல் தடுப்பூசியை மருத்துவமனையின் ஆர்எம்ஓ  கண்ணப்பன், இரண்டாவதாக கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மூன்றாவதாக  மருத்துவ கண்காணிப்பாளர் அமுதசுரபி ஆகியோருக்கு செவிலியர் துர்கா தடுப்பூசி  போட்டார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.  தொடர்ந்து ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடப்படும் பணி நடந்தது. இதில்  மையத்திற்கு தலா 100 பேர் வீதம் 300 பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி  போடப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று 99 பேருக்கு  மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இத்தடுப்பூசி போடுவதற்காக அரசு மற்றும்  தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 7,916 மருத்துவர்கள், செவிலியர்கள்  உள்ளிட்ட சுகாதாரம் பணியாளர்களின் விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்  செய்யப்பட்டது. இவர்களில் இருந்து தடுப்பூசி பெற வரும் பயனாளிகளில் பதிவு  செய்யப்பட்ட அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.   பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அச்சமடைய வேண்டாம் என அமைச்சர்  சரோஜா தெரிவித்தார்.

Tags : Corona ,Vaccine Minister ,district ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...