ஆடு, கோழி பலியிட்டு கிராம மக்கள் வழிபாடு

போச்சம்பள்ளி, ஜன.17:  போச்சம்பள்ளி அருகே உள்ள புங்கம்பட்டி ஊராட்சியில் நாகர்குட்டை மலை அடிவாரத்தில் நாகதேவதை கோவில் உள்ளது. மூலவரான நாகதேவதை பாம்பு உருவிலும், சிலையாகவும் காட்சியளிக்கிறார். இந்த கோயில் திருவிழா ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் மறுநாள் கரிநாளன்று கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று நடந்த விழாவில் பெங்களூரு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சந்தூர், அரசம்பட்டி, இருமத்தூர், பாரூர், புங்கம்பட்டி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நாகதேவதையை வழிபட்டனர். கிராமங்களில் அடிக்கடி பாம்புகள் படையடுத்து வருகிறது. அதற்கு பரிகாரமாக கிராம மக்கள் நாகதேவதைக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவை தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேர் மீது உப்பு, நெல் விதைகளை வீசி நேர்த்தி கடனை செலுத்தினர். திருவிழாவையொட்டி, பாரூர் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

Related Stories:

>