10,583 பேருக்கு கொரோனா தடுப்பூசி அமைச்சர் துவக்கி வைத்தார்

தர்மபுரி, ஜன.17: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். முதல் தடுப்பூசி நர்சு ஜெயந்தி, மருத்துவர் ஜானி அப்ரகாம், முதல்வர் (பொ) டாக்டர் இளங்கோவன், மருத்துவ கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட 60 பேர் போட்டுக்கொண்டனர்.

விழாவில் அமைச்சர் கேபி அன்பழகன் பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்து 11,800 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மாவட்டத்தில் 10,583 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. 4 மையங்களில் நாளொன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், மேல்சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1,83,516 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 6,524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 6,414 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 58 பேர் உள்ளனர்,’ என்றார்.

நிகழ்ச்சியில், எஸ்பி பிரவேஷ்குமார், எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், டிஆர்ஓ ராமமூர்த்தி, சப்கலெக்டர் பிரதாப், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெமினி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  வெற்றிவேல், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் அன்பழகன், கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரூர்: அரூர் அரசு மருத்துவமனையில் 110 டோஸ் கொரோனா தடுப்பூசி வந்துள்ளது. முன்பதிவு செய்த 76 பேருக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணியை, தர்மபுரி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் திலகம் நேற்று துவக்கி வைத்தார். முதலாவது தடுப்பூசியை, அரூர் அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேஷ்கண்ணா, அரூர் வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன் ஆகியோர் போட்டுக் கொண்டனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஊசி போட்டுக் கொண்ட அனைவரும், அரை மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு தங்களது பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

Related Stories: