பெரணமல்லூர் பகுதியில் கோயில்களில் காணும் பொங்கல் சிறப்பு வழிபாடு

பெரணமல்லூர், ஜன.17: பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகமும். தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் பூதேவி, ஸ்ரீதேவி சமேத லட்சுமிநரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சிம்ம மலையில் உள்ள சீனுவாச பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர்.

இதேபோல் இஞ்சிமேடு திருமணிசேறையுடையார் சிவனாலயத்தில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் திருமணிசேறை உடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில் மற்றும் நெடுங்குணம் ராமச்சந்திரபெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரணல்லூர் ஒன்றியத்தில் காணும் பொங்கல் சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Related Stories: