தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் வெறுக்கிறார்? அமைச்சர் கேள்வி

சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அலுவலகத்தில், 405 பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் 117 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த துறையின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை, 35,702 -புதிய பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 43,375 பேருக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணியிடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று வழங்கப்பட்ட பதவி உயர்வு ஆணையுடன் சேர்த்து இதுவரை 16,610 பேருக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 17,780 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆக இதுவரை 1,12,945 பேர் இத்துறையின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை இதுவரை தன் இருப்பிலேயே வைத்திருந்துவிட்டு தற்போது குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருப்பதாக தெரிகிறது. இந்த சித்த மருத்துவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ரூ.2 கோடி அளவிற்கு நிதி ஆதாரம் வழங்கி அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் தயாரான நிலையில் 25 ஏக்கர் நிலம் மாதவரம் பால்பண்ணை பகுதியில் தேர்வு செய்யப்பட்டு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. ஆனால் ஆளுநரின் ஒப்புதல் என்பது இரண்டாவது முறையாக ஏமாற்றம் அளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை ஏன் ஆளுநர் வெறுக்கிறார் என்று தெரியவில்லை. இது உண்மையிலேயே ஒட்டுமொத்த தமிழர்கள் வருத்தப்படுகின்ற மிகப் பெரிய நிகழ்வாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: