சென்னை: வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை இன்று தொடங்குகிறது. சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறும் பரப்புரையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ‘வாக்குச்சாவடியை வென்றால் தொகுதியை வெல்லலாம். அதற்காக “என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி” என்ற பரப்புரையை தொடங்கப்படும்\\\\” என்று அறிவித்து இருந்தார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள கட்சி கட்டமைப்பு தான் நமது பலம். இந்த பலங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்துவதே நமது முக்கியமான வியூகம் ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது வாக்குகளை உறுதி செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது திமுகவினர் உற்சாகத்துடன் செயல்பட வைக்க வேண்டும். அதற்காகத்தான், “என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி” என்ற இந்தப் பரப்புரை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
அதன்படி வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு முழுக்கவும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்கும் வகையில் இந்த பரப்புரை தொடங்குகிறது. சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறும் இந்த பரப்புரையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாக்குச்சாவடியில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் பரப்புரையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கலந்து கொள்ள உள்ளார். இதே போல தமிழகம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பரப்புரையில் மாநில நிர்வாகிகள் முதல், வார்டு மற்றும் கிளைச் செயலாளர்கள் வரை பங்கேற்க உள்ளனர்.
மேலும் அந்த வாக்குச்சாவடியில் மூத்த திமுக முன்னோடிகளும் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு வீடாக செல்ல உள்ளனர். அங்கு அவர்கள் விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்க்க உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும், திமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகளையும் வழங்க உள்ளனர். ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் உள்ள கட்சி கட்டமைப்பு தான் நமது பலம். இந்த பலங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்துவதே நமது முக்கியமான வியூகம் ஆக இருக்க வேண்டும்.
