திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 சிறப்பு மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

திருவண்ணாமலை ஜன.17: திருவண்ணாமலை மாவட்டத்தில், 6 சிறப்பு மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. 17,206 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா தொற்று பரவல். இந்த அச்சத்திற்கு முடிவுகட்டும் வகையில், தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதையொட்டி, நேற்று நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு தொடங்கியது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் 6 மையங்களில் நடந்தது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்பெண்ணாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காட்டாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செய்யாறு அரசு மருத்துவமனை, எஸ்வி நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் முன் களப்பணியாளர்களான சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

அதன்படி, இந்த முகாமை ஆரணி அடுத்த எஸ்வி நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ ரத்தினசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள். ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 99 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 372 தனியார் மருத்துவமனைகள் உள்ளன.இவற்றில் பணிபுரியும் 17,206 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, முதற்கட்டமாக 14,400 கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு தொடர்ந்து சம்பந்தப்பட்ட 6 சிறப்பு மையங்களில் நடைபெற உள்ளது.

Related Stories:

>