×

காணும் பொங்கலையொட்டி சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

அணைக்கட்டு, ஜன. 17: காணும் பொங்கலையொட்டி சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.வேலூர் தாலுகா பென்னாத்தூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மாடுவிடும் விழா நடந்தது. மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அனைவரும் விழா உறுதிமொழி ஏற்று கொண்டதை தொடர்ந்து விழா பகல் 10 மணியளவில் தொடங்கியது. கால்நடை மருத்துவர் சண்முகம் பரிசோதனைக்கு பின்னர், மாடுகள் ஒவ்வென்றாக வீதியில் அவிழ்த்து விடப்பட்டது. சோழவரம், ஊசூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 55 மாடுகள் சீறிபாய்ந்து ஓடியது. 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழாவை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தினர். சீறிப்பாய்ந்த மாடுகள் முட்டியதில் காயமடைந்த 2 பேருக்கு முகாமிட்டிருந்த கணியம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று நடந்த மாடுவிடும் விழாவில் உள்ளூர் மாடுகளே அதிகளவில் பங்கேற்று ஓடியது. ஒவ்வொரு மாடும் 3 முதல் 5 சுற்றுகள் வரை விடப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து மூன்று சுற்றுகளுக்குமேல் விடக் கூடாது என்று போலீசார் மைக்கில் எச்சரித்துக் கொண்டே இருந்தனர். இருப்பினும் 4 சுற்றுகளுக்கு மேல் ஒரே மாட்டை ஓடவிட்டு கொண்டிருந்தனர். 12 மணிக்கு மேலாகியும் இதேபோல் விட்டுக் கொண்டிருந்ததால், கோபமடைந்த போலீசார், வெயில் நேரத்தில் ஒரே மாட்டை அதிக சுற்றுகள் விட்டால், அதற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் எனக்கூறி விழாவை முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து விழா பகல் 12.30 மணியோடு முடித்து கொள்ளப்பட்டது. விழாவை சரியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் துறையினரோ ஒரே இடத்தில் அமர்ந்து இருந்துவிட்டு முடிந்ததும் விட்டால் போதும் என்று கிளம்பி சென்றனர்.

Tags : cow slaughtering ceremony ,village ,Pongalaiyotti Cholavaram ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...