வெள்ள பாதிப்பு ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி, ஜன. 17: தூத்துக்குடியில் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர்  170 ராட்சத பம்புகள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர்ராஜு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் சண்முகநாதன், சின்னப்பன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், சப் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். அதில் பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் அளித்த பேட்டி:தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்தது மட்டுமின்றி தூத்துக்குடி நகர் பகுதியில் நேற்று முன்தினம் 108 மி.மீட்டரும், நேற்று 40 மி.மீ மழையும் பதிவானதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. போர்க்கால அடிப்படையில் 170 ராட்சத பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்ற மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 20 பம்புகளுக்கு ஒரு துணை கலெக்டர் நிலையில் நியமித்து மாநகராட்சி பணியாளர்கள் 24 மணி நேரம் மழைநீர் வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தடுப்பு கட்டுப்பாட்டு அறை வாட்சப் எண், தொலைபேசி எண் வாயிலாக பாதிப்பு பகுதியினை அறிந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து தன்னார்வலர்களையும் ஊக்கவிக்கிறோம். நேற்று முன்தினம் தாமிரபரணியில் உபரிநீர் 84 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்பட்டது. நேற்று 45 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. ஆங்காங்கே நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், ஏரல் பகுதியில் 11 நிவாரண முகாம்கள் அமைத்து 905 பேர்கள் தங்கவைக்கப்பட்டு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சுகாதாரத்துறையின் மூலம் வழங்கப்படுகிறது. விவசாயத் துறையின் மூலம் பயிர் சேதங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories:

>