தூத்துக்குடியில் 2வது நாளாக பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடி, ஜன. 17: மழைநீரை அகற்றுவதாக பாவனை செய்த அதிகாரிகளை கண்டித்து தூத்துக்குடியில் நேற்று 2வது நாளாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், தனசேகரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் அகற்ற முடியாமல் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்  மழை நீரை அகற்றக் கோரியும், இதற்கு தடையாக உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் நேற்று மறியல் நடந்தது.அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் நேற்று முன்தினம் ஜேசிபி மூலம் மழை நீரை அகற்றும் பணி துவக்கி விட்டு, அதிகாரிகள் அங்கிருந்து ‘எஸ்கேப்பாகி’ விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் நேற்று எட்டயபுரம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த சாலை மறியலால் ரோட்டின் இரு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேக்கம் அடைந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் மழை வெள்ளநீரை அகற்றும் பணி தொடங்கும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

   ஸ்பிக்நகர்: முத்தையாபுரம் வடக்கு தெரு, முஸ்லிம் தெரு, வரதவிநாயகர் கோயில்தெரு, முனியசாமி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் தோப்பு தெரு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் சப் கலெக்டர் சிம்ரன் ஜித் கலோன், டிஎஸ்பி கணேஷ், இன்ஸ்ெபக்டர்(பொ) பிச்சைபாண்டியன், தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.   கூடுதல் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories:

>