தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேக்கம் கோவில்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை

கோவில்பட்டி, ஜன. 17: கோவில்பட்டி பகுதியில் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால்  அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் முளைத்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் பல இடங்களிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்த தொடர் மழை வெள்ளம் பெரும் பயிர் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடுவை முடிவடைந்து வளரும் பருவத்தில் நெற்பயிர்கள் உள்ளன. இந்நிலையில் தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி பயிர்களை மூழ்கடித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயறு ஆகியவை சுமார் 78,500 ஹெக்டேரிலும், 69 ஆயிரம் ஹெக்டேரில் சிறுதானியங்களும், 47 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளம், 5 ஆயிரத்து 300 ஹெக்டேரில் பருத்தி ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது. இதில் பயறு வகைகள், மக்காச்சோளம் உள்ளிட்டவை அறுவடைக்கு தயாராக உள்ளன.

தொடர் மழையால் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பயறு வகை பயிர்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முளைக்கத் தொடங்கி உள்ளன. இதேபோன்று பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளும், நெற்பயிர்களும் தண்ணீரில் மிதக்கின்றன.  இன்னும் சில நாட்கள் தண்ணீர் தேங்கினால், பயிர்கள் அழுகி சேதமடையும் சூழல் இருக்கிறது. விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பிறகு பயிர் சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.இதேபோல் உளுந்து, பாசி பயிர்களும் அறுவடை செய்யும் நேரத்தில், தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான உளுந்து, பாசி பயிர்கள் தற்போது செடியிலேயே முளைத்து சேதம் அடைந்துள்ளன. முழுமையான நிவாரணம் இதுகுறித்து விவசாயி முனியசாமி என்பவர் கூறும்போது, கோவில்பட்டி பகுதியில் தொடர் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி அனைத்து பயிர்களும் அழிந்து விட்டன. உளுந்து, நெற்பயிர்கள் பெருத்த சேதமடைந்துள்ளன. எனவே எங்களுக்கு அரசு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

விவசாய கடன் தள்ளுபடி

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, தொடர் மழையால் அனைத்து வட்டாரங்களிலும் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டது. ஒருபடி மகசூல் கூட வீடு வந்து சேராது. மக்காச்சோளம், கம்பு, வெள்ளைச் சோளம், உளுந்து, பாசி கதிரிலேயே வித்து முளைத்து விட்டது. கடந்த ஆண்டு 2019-2020க்குரிய பயிர் காப்பீடு இழப்பீடு விவசாயிகள் கட்டிய பிரீமிய தொகையை விட குறைவாக விடுவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு இழப்பீடு பாதிப்பிற்கேற்ற அளவில் கிடைக்கவில்லை. உளுந்து, பாசி கடந்த ஆண்டு முழுவதும் பாதிக்கப்பட்டும் பல கிராமங்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழையால் மகசூல் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கடந்த 13ம்தேதி முதல்வர் அறிவித்திருப்பது ஓரளவு விவசாயிகளுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்து அனைத்து பயிர்களுக்கும், பயிரிடப்பட்ட அனைத்து நிலப்பரப்பிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related Stories: