×

குயிலாப்பாளையத்தில் மஞ்சு விரட்டு

வானூர், ஜன. 17: ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் காணும் பொங்கலையொட்டி நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி நேற்று மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது. வானூர் பகுதியில் மாட்டுப்பொங்கல் தினத்தில் கிராமங்கள்தோறும் மாடுகளை அலங்கரித்து மந்தக்கரைக்கு அழைத்துவந்து மஞ்சுவிரட்டு நடைபெறும். ஆனால் குயிலாப்பாளையம் கிராமத்தில் மட்டும் காணும் பொங்கல் தினத்தில் மஞ்சு விரட்டு நடைபெறும். அதன்படி நேற்று காலையில் விழா துவங்கியது. இதைக்காண எல்லை பிடாரியம்மன் கோயில் வளாகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில்வாசிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் ஆரோவில், கோட்டக்குப்பம், வானூர், கிளியனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு எல்லை பிடாரியம்மன் கோயில் வளாகத்தில் மஞ்சுவிரட்டு நடந்தது. மாடுகளின் கொம்புகளுக்கிடையே தேங்காய், வாழைப்பழம் கட்டி அலங்கரிக்கப்பட்டது. மேலும் வண்ண வண்ண பலூன்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர் மற்றும் நடிகைகளின் படங்களையும் கொம்புகளுக்கிடையே பொருத்தி மாடுகளின் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். இதனை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Tags : Manchu ,Kuilapalayam ,
× RELATED சூர்ப்பனகை வேடத்தில் லட்சுமி மன்ச்சு?