×

நெய்வேலியில் துணிகரம் என்எல்சி அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை, ₹70 ஆயிரம் கொள்ளை

நெய்வேலி, ஜன. 17: என்எல்சி அதிகாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெய்வேலி டவுன்ஷிப் மெயின் பஜார் அண்ணா சாலையில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் மகன் செல்வகுமார்(54). இவர் என்எல்சி 2ம் நிலக்கரி சுரங்கத்தில் மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி தனது குடும்பத்தினருடன் காரில் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனது தந்தையை பார்க்க சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வகுமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 30 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கும். இது குறித்து நெய்வேலி நகர போலீசாருக்கு செல்வகுமார் தகவல் தெரிவித்தார். நெய்வேலி டிஎஸ்பி (பொறுப்பு)  கங்காதரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஷாகுல் அமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். என்எல்சி குடியிருப்பு பகுதியில் நடந்த இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : officer ,Venture NLC ,house ,Neyveli ,jewelery ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...