காணும் பொங்கலையொட்டி புதுவை சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

புதுச்சேரி, ஜன. 17:  தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் 14ம்தேதி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மாட்டு ெபாங்கல் கொண்டாடப்பட்டது. 3ம் நாளான நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழகத்தைபோல் புதுவையில் சுற்றுலா தலங்களுக்கு அரசு தடை விதிக்காததால் கடற்கரை, தாவரவியல் பூங்கா, மணக்குள விநாயகர் கோயில் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் புதுச்சேரி வந்திருந்தனர். இதனால் சுண்ணாம்பாறு படகு குழாமில் அதிகளவில் கூட்டத்தை காணமுடிந்தது. பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.இதேபோல் ஊசுட்டேரி படகு குழாமிலும் காணும் பொங்கலை கொண்டாட குழந்தைகளுடன் பெற்றோர் குவிந்தனர். புதுச்சேரி கடற்கரை பகுதிக்கும் அந்தந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் நண்பர்கள், உறவினர்களுடன் சென்று காணும் பொங்கலை கொண்டாடினர். அதேவேளையில் ஆரோவில் மாத்ரி மந்திரை காண விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.காணும் பொங்கலையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்க காவல்துறை தடை விதித்தது. இருப்பினும் தடையை மீறி ஆங்காங்கே சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கடலில் இறங்கி குளியல் போட்டனர். அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை எச்சரித்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டிராபிக் போலீசாரும் ஆங்காங்கே முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: