விபத்தில் பலியான வாலிபர் சடலத்துடன் சாலை மறியல்

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 17: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மகன் வெங்கடேசன் (35), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று மாலை மொபட்டில் மடப்பட்டு சென்று விட்டு அங்கிருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர், இரண்டு மகள்களுடன் ைபக்கில் திருக்கோவிலூரில் இருந்து மடப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். துலுக்கப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது பைக்கும், மொபட்டும் நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கில் சென்ற 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். மொபட்டில் சென்ற வெங்கடேசனின் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.தகவல் அறிந்த வெங்கடேசனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமான நிலையில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்தஉறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரின் சடலத்தை சாலையின் குறுக்கே வைத்து மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் பலராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து டிஎஸ்பி சின்னராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து வெங்கடேசன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறியல் காரணமாக சுமார் இரண்டரை மணி நேரம் கடலூர்-சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: