அரசு மருத்துவக்ககல்லூரி மருத்துவமனையில் முன்களப்பணியார்கள் 61 பேருக்கு தடுப்பூசி

திருப்பூர், ஜன.17:  திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஒரு நாள் மட்டும் 61 முன்களப்பணியாளர்கள் தடுப்பூசி போடப்பட்டது என அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி தெரிவித்தார்.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று கொரோனா  தடுப்பூசி முகாமினை டீன் வள்ளி சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார்.  நாடு முழுவதும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணி புரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களான  என முன் களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக நேற்று கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் முதற்கட்டமாக சுமார் 13,500 டோஸ் மருந்துகள் பெறப்பட்டு திருப்பூர் துணை இயக்குநர், சுகாதார பணிகள் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட குளிர்சாதன பெட்டியில் போலீசார் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை, அவினாசி அரசு மருத்துவமனை மற்றும் பெருமாநல்லூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் இத்தடுப்பூசி மருந்துகள் போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்த மருத்துவ நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதமாக 400 பேருக்கு நேற்று முதல் தடுப்பூசி மருந்து வழங்கப்பட இருந்தது. திருப்பூர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஸ்ரீவித்யா (46) கொரோனா முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இவரைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உஷா(61), எமிலி(76) மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர் மணிமேகலை (50) ஆகியோர் முறையே தடுப்பூசியை போட்டனர். இவர்களைத் தொடர்ந்து பதிவு செய்த முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள் தவிர இந்தியன் மெடிக்கல் அசோசியேசனை சேர்ந்த தன்னார்வலர்களுக்கும் தடுப்பு ஊசி வழங்கப்பட்டது. இதில், 50 வயதிற்கு குறைவானவர்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் வயதான சிலர் தாங்களாகவே தன்னார்வலர்களாக முன்வந்து கோவிஷீல்டு எனப்படும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்கிறார்கள். இதே 28 நாட்கள் கழித்து மீண்டும் போட வேண்டும்.

இதை, மாதமாக உள்ளவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள், வேறு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் போடக்கூடாது. ஊசி போட்டபிறகு அரை மணி நேரம் அவர்களைக் கண்காணித்து அனுப்புகிறோம். இத்தகைய, தடுப்பூசி மருந்து போட்டுகொள்பவர்கள் 28 நாட்களுக்கு மது அருந்தக்கூடாது.இதுவரை சுமார் 500 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கான மருந்தும் வரப்பெற்று, கையிருப்பில் உள்ளது என்றார்.  

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவமனை அனுக வேண்டும். திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஒரு நாள் மட்டும் அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் என ஆண்கள் 38 பேர், பெண்கள் 16, தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 2, பெண்கள் 5 பேர் என மொத்தம் 61 முன்களப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இன்று (17ம் தேதி) விடுமுறை என்பதால் நாளை (18ம் தேதி) மீண்டும் தடுப்பூசி போடப்படும். மேலும், கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் என பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>