கோவை: உக்கடம் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று (08.12.2025) கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம், அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம், ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தில் 4 குடியிருப்புகள் மற்றும் 18 வணிக கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை வெளியேற்றிட கோவை மண்டல இணை ஆணையர் அவர்களால் 2015 ஆம் ஆண்டில் சட்டப்பிரிவு 78-ன்படி ஆக்கிரமிப்பினை அகற்றிட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் துறையின் செயலாளர் ஆகியோரிடம் செய்திருந்த மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
2018 ஆம் ஆண்டில் ஆக்கிரமிப்பாளர் சரவணமூர்த்தி மற்றும் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நடத்த மனுதாரர்கள் முன்வராததால் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கினை தள்ளுபடி செய்து, திருக்கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78 மற்றும் 79-ன் கீழ் தொடரப்பட்ட வழக்கு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி கோவை மண்டல இணை ஆணையர் பெரமேஷ் உத்தரவின்படி, உதவி ஆணையர்கள் உ.ச.கைலாஷமூர்த்தி மற்றும் மு.இரத்தினாம்பாள் ஆகியோர் முன்னிலையில் காவல்துறை உதவியுடன் திருக்கோயிலுக்கு சொந்தமான 80 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.100 கோடியாகும். இதுவரை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 1,063 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ. 8,230.55 கோடி மதிப்பிலான 8,024.43 ஏக்கர் திருக்கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர்கள் ரா.விஜயலட்சுமி. ரா.செந்தில்குமார். காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன், உதவி ஆணையர் முருகேசன், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) பரமேஸ்வரி, செயல் அலுவலர், ஆய்வாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
