மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு,ஜன.17: ஈரோடு அரசு மருத்துவமனை முகாமில் முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டமாக போடப்படும் தடுப்பூசியை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.   நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்கள பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நேற்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கினார். இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் கலெக்டர் கதிரவன் தலைமையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.  இதைத்தொடர்ந்து பின்னர், அரசு மருத்துவர்கள் கூறியதாவது:  ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் என 5 இடங்களில் துவங்கப்பட்டுள்ளது. டாக்டர்கள், நர்ஸ், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 13,800 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான 13,800 டோஸ் மற்றும் கூடுதலாக, 20 சதவீத மருந்தும் வந்துள்ளது.

   இவை, 86 மையங்களில் குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தினமும் 100பேர் வீதம் 5 முகாம்களிலும் 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிகழ்ச்சியில், ஈரோடு எஸ்பி., தங்கதுரை, எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி, தோப்பு வெங்கடாசலம், ராஜா என்ற ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, துணை இயக்குனர் சவுண்டம்மாள், அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பவானி:  பவானி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், முன்கள சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு முகாமினை தொடங்கி வைத்தார். பவானி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். தொடர்ந்து, மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, வசந்தமஞ்சு, பூர்ணசந்திரிகா, சண்முகம் உள்ளிட்டோரும், மருத்துவப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஜம்பை வட்டார மருத்துவ அலுவலர் தனலட்சுமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>