×

மாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்

அண்ணாநகர்: மாட்டு பொங்கல் பண்டிகையின்போது கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு  திடீர் தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கால்நடை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தை திருநாள் பொங்கல் பண்டிகையின்போது உழவு தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும்விதமாக, மாட்டு பொங்கல் விழா தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம், மாலை மற்றும் சலங்கை கொண்டு அலங்கரித்து, பின்னர் மாடுகளுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு மாட்டு பொங்கல் விழா நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மாடுகளை வளர்ப்பவர்கள் அங்குள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளத்தில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கலன்று தங்களது மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரிப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் மாடுகளை குளிப்பாட்ட கோயில் குளத்துக்கு அழைத்து சென்றபோது, கோயில் குளத்தின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகி ஜெயபிரகாஷிடம் கேட்டபோது, கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்ட அனுமதிக்க மறுத்ததுடன், அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.  இதை கண்டித்தும், மாடுகளை குளிப்பாட்ட கோயில் குளத்தை திறந்துவிட வலியுறுத்தியும் கால்நடை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மாநில தலைவர் சுரேஷ், மாநில இணை செயலாளர் சாந்தகுமார் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் கோயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த வில்லிவாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோயில் நிர்வாகத்தினரிடம் பேசி, கோயில் குளத்தில் மாடுகளை குளிக்க வைப்பதற்கு அனுமதி வாங்கி கொடுத்தனர். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : cow festival ,temple pond ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...