திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள் குவிந்துள்ளதால் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள தூண்களுக்கு இடையே சென்டர் மீடியன் கட்டப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இந்த சென்டர் மீடியனில் அங்குள்ள சிலர் வீடு மற்றும் கடைகளின் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். நாள்கணக்கில் தேங்கியுள்ள இந்த குப்பை கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலை உள்ளது.

எனவே, இவற்றை அகற்ற வேண்டும் என திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. இதனால் ஒரு சிலர் குப்பை கழிவுகளை சென்டர் மீடியனில் கொட்டுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சென்டர் மீடியனில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி, கிடப்பில் உள்ள கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும், பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories:

>