×

ரோட்டில் கிடந்த பணம் ஒப்படைப்பு

விருதுநகர் அருகே குமாரலிங்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அடைக்கலம், தனது ஆட்டோவில் விருதுநகர் வந்து திரும்பி சென்றுள்ளார். சிவகாசி ரோடு சாய்பாபா கோயில் சந்திப்பில் ரோட்டில் பர்ஸ் கிடந்துள்ளது. பர்ஸில் பணம் ரூ.3,700, ஏடிஎம் கார்டு, ஆதார்கார்டு, வாகன ஓட்டுனர் உரிமம் இருந்துள்ளது. உடனே அதை ஆமத்தூர் போலீஸ் நிலையம் சென்று எஸ்ஐ கார்த்திக் வசம் ஒப்படைத்துள்ளார். விசாரணையில் சிவகாசியை சேர்ந்த வெற்றிவேல் பைக்கில் மதுரை சென்று சிவகாசி திரும்பி சென்ற போது பர்ஸை தவறவிட்டது தெரியவந்தது. வெற்றிவேலை அழைத்து பணம், ஆவணங்களை ஒப்படைத்து ஆட்டோ டிரைவர் அடைக்கலத்தை போலீசார் பாராட்டினர்.

வாலிபர் பலி
சிவகாசி அருகே நாரணாபுரம் ரோடு இந்திராநகரை சேர்ந்தவர் காத்தமுத்து (31). இவர் தனது டூவீலரில் சென்ற போது, முன்னாள் சென்ற டூவீலர் திடீரென வளைந்து மோதியது. இதில் காத்தமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இணையவழி கருத்தரங்கம் ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் இணைய வழி கருத்தரங்கம் நடந்தது. சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், வேதியியல் துறை தலைவருமான ஜெயசுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆராய்ச்சி இதழ்கள் குறித்தும், ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிப்பது குறித்தும், அதிலுள்ள நுணுக்கங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்து பங்கேற்ற அனைவருக்கும் மின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு கலை- அறிவியல், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை ராம்கோ கல்லூரியின் முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜகருணாகரன், துணை பொது மேலாளர் செல்வராஜ் வழிகாட்டுதல்படி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

வாலிபர் தற்கொலை
சிவகாசி ஓடை  தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (33). இவர் குடிப்பழக்கத்தால் வேலைக்கு  செல்லாமல் இருந்ததை சகோதரர் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த பாண்டியராஜன்  வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார்  வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

பூமி பூஜை விழா
ராஜபாளையம் அருகே வெங்கநல்லூர் ஊராட்சி, கம்மாபட்டியில் கழிப்பறை கட்ட பூமிபூஜை நடந்தது. ஒன்றிய தலைவர் சிங்கராஜ் தலைமை வகிக்க, ஊராட்சி தலைவர் இசக்கிராஜா முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர் அனுசுயா, ஒன்றிய பொறியாளர் வைரபிரகாஷ், 1வது வார்டு உறுப்பினர் இந்திராகாந்தி மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

3 நாள் டாஸ்மாக் மூடல்
விருதுநகர் கலெக்டர் கண்ணன் உத்தரவு: மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மது விற்பனை கடைகள், எப்.எல்.2, எப்.எல் 3, எப்எல் 3 ஏ, எப்எல் 3 ஏஏ., எப்எல் 11 ஆகிய மதுபான உரிம தலங்களை திருவள்ளுவர் தினம் ஜன.15, குடியரசு தினம் ஜன.26, வள்ளலார் நினைவு தினம் ஜன.28 ஆகிய 3 நாட்கள் தற்காலிகமாக மூட வேண்டும். உத்தரவினை மீறி மது விற்பனை கடை, பார்கள் திறந்திருந்தால் விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கொலை மிரட்டல்
சிவகாசி  அருகே திருத்தங்கல் மேற்கு ரதவீதியை சேர்ந்தவர் துர்காதேவி (22). இவரது கணவர் பாண்டி (34) குடும்ப தகராறு ஏற்பட்டதால் துர்காதேவி கடந்த 3 வருடங்களாக பெற்றோர் வீட்டில் வசித்து  வருகிறார். இந்நிலையில் அங்கு வந்த பாண்டி , துர்காதேவியின் தாய் கண்ணகி, தந்தை செந்தில்குமாரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர்.

சமத்துவ பொங்கல் விழா
விருதுநகர் கலெக்டர் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கண்ணன் தலைமையில் டிஆர்ஓ மங்களராமசுப்பிரமணியன், திட்ட அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகள், அலுவலர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். கூரைக்குண்டு ஊராட்சியில் நடந்த விழாவில் மண்டல திட்ட உதவி அலுவலர் வர்கிஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஊராட்சி தலைவி செல்வி, மாரிக்கனி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ரோசல்பட்டி ஊராட்சியில் தலைவி தமிழரசி தலைமையிலும், சிவஞானபுரம் ஊராட்சியில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் தலைவர் மருது தலைமையிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...