சென்னை:14வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் ஸ்பெயின், 2 முறை உலக சாம்பியான அர்ஜென்டினா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் 2-1 என ஸ்பெயின் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடந்த 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியனும், 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணியுமான ஜெர்மனியுடன் இந்தியா மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி முதல் பாதியிலேயே 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. தொடர்ந்து இந்திய வீரர்களை திணறடித்து 55 சதவீதம் தங்கள் பங்ககே பந்தை வைத்திருந்த ஜெர்மனி அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
வரும் 10ம் தேதி இரவு 8 மணிக்கு சென்னை எழும்பூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் பைனலில் ஜெர்மனி-ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்துகிறது. முன்னதாக அன்று மாலை 5.30 மணிக்கு 3வது இடத்திற்கான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அர்ஜென்டினாவுடன் இந்தியா மோத உள்ளது.
