×

ரூ.100-150 கோடி சம்பளம் கிடையாது‌; விகிதாச்சார அடிப்படையில் நடிகர்களுக்கு ஊதியம்: திருப்பூர் சுப்ரமணியம் வலியுறுத்தல்

திருப்பூர்: தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், நேற்று திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அது வருமாறு: சமீப காலமாக தென்னிந்திய சினிமா அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. பெரிய அளவிலான படங்கள் வெளியாவதில்லை. ரூ.100-150 கோடி என்று சம்பளம் வாங்கியவர்கள், இன்று வேலை இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர். காரணம், அதிகப்படியான சம்பளம் கொடுத்த நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு படங்கள் முழுமையாக வருவது இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக புதிய படங்களை 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், அதன் பாதிப்பு இன்று தெரிகிறது. யாருடைய படத்தையும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

சிகை அலங்கார நிபுணருக்கு பேட்டா, ஹீரோவின் பவுன்சருக்கு பேட்டா, பெட்ரோல் என்று அனைத்தையும் தயாரிப்பாளரிடம் வசூலித்ததால், பல தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் சொந்தப் படம் எடுக்க விரும்புவதில்லை. பெரிய ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை நல்லபடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வீண்செலவுகளை தவிர்த்தால் சினிமா தொழில் சிறப்படையும். சிறுபடங்கள் எடுப்பவர்கள் கூட கதைக்கருவை மையமாக வைத்து எடுக்கின்றனர். ஆனால், பெரிய படங்களில் நடிகர்களை மையப்படுத்தி எடுக்கிறார்கள். சில படங்கள்தான் ரீ-ரிலீசில் சாதித்தன.

இனி நடிகர்களுக்கு சம்பளம் கிடையாது‌. விகிதாச்சார அடிப்படையில்தான் ஊதியம் என்பதை வலியுறுத்த முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய முத்தரப்பு நேரடி கூட்டம் நடத்தி ஆலோசனை செய்யப்படும். அதில் சினிமா துறையை நலிவில் இருந்து மீட்க தேவையான ஆலோசனைகளை வலியுறுத்தி தீர்வு காணப்படும்.

Tags : Tirupur Subramaniam ,Tirupur ,Tamil Nadu Cinema and Multiplex Owners Association ,President ,
× RELATED வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது வெண்கல முருகன் சிலை கண்டெடுப்பு