×

பூவந்தியில் 9 ஆண்டுக்குபின் நெல் விவசாயம் கண்மாய் நீரை நம்பி களமிறங்கும் விவசாயிகள்

திருப்புவனம், ஜன.13: திருப்புவனம் அருகே பூவந்தியில் 9 ஆண்டுகளுக்குப்பின் கண்மாய் தண்ணீரை நம்பி நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த பூவந்தி கண்மாயை நம்பி 800 ஏக்கர் பாசனப் பரப்புகள் உள்ளன. கடந்த 9 ஆண்டாக கண்மாய்க்கு போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயப்பணிகள் நடைபெறவில்லை. தற்போது தொடர் மழையால் கண்மாய்க்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனால்  விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 9 ஆண்டாக தரிசாக கிடந்த நிலங்கள் எல்லாம் விளைநிலமாக மாற தொடங்கியுள்ளன.

 இதுகுறித்து பூவந்தி விவசாயிகள் கூறுகையில், தொடர் மழையால் கண்மாயில் தண்ணீர் சேகரமாகி வருகிறது. இதனை நம்பி விவசாய பணிகளை தொடங்கியுள்ளோம். கடந்த 9 ஆண்டுக்குப்பின் நெல் நடவு செய்கிறோம். 800 ஏக்கர் பாசனப்பரப்பில்  தற்போது 150 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடி செய்துள்ளோம். கண்மாயில் உள்ள தண்ணீர் 2 மாதத்திற்குதான் பயன்படும். அதற்குப்பின்னர் தண்ணீரின்றி நெல்லை காப்பாற்றுவது கடினம். தற்போது வைகை அணையில் தண்ணீர் இருப்பு  உள்ளது. சிவகங்கை மாவட்ட வைகைப்பாசன விவசாயிகள் தமிழக முதல்வரை கடந்த வாரம் சந்தித்து  வைகையில் இருந்து கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தியுள்ளோம்.  தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம்தான் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : Poovandi ,
× RELATED பூவந்தியில் ஊராட்சியில் கண்மாய் குடிமராமத்து பணிகளை அதிகாரிகள் ஆய்வு