×

வேலைக்கு அழைப்பது போல் நடித்து 11 பேரின் செல்போன் அபேஸ்: 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: சென்னை பூக்கடை, சவுகார்பேட்டை, பூங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான கூலி தொழிலாளர்கள் பூக்கடை பகுதிக்கு வந்து, ஒரு இடத்தில் மொத்தமாக நிற்பது வழக்கம். கட்டிட வேலை, கார்பென்டர், பெயின்ட் உள்ளிட்ட பணிக்கு ஆட்கள் தேவைப்படுபவர்கள் இங்கு வந்து செல்வார்கள். அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு வந்த 3 பேர், பழைய வீட்டை இடித்து அப்புறப்படுத்த ஆட்கள் வேண்டும் எனக்கூறி, 11 தொழிலாளர்களை அழைத்து சென்றுள்ளனர். ஒரு பாழடைந்த வீட்டின் அருகே அவர்களை நிற்க வைத்துவிட்டு, இங்கு தான் வேலை செய்ய வேண்டும். எனவே, உங்களது செல்போன் உள்ளிட்ட உடமைகளை கொடுத்தால், பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு வருகிறோம் என கூறியுள்ளனர்.   

அதன்படி, 11 பேரும் தங்களது செல்போன்களை கொடுத்துள்ளனர். அதை வாங்கி சென்ற மூவரும் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், தங்களது செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த தொழிலாளர்கள், இதுகுறித்து பூக்கடை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், விருதாச்சலத்தை சேர்ந்த சுரேஷ் (32), தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சித்திக் (53), நைனார் முகமது (63) ஆகியோர், நூதன முறையில் செல்போன்களை அபேஸ் செய்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...