திருமங்கலம் அருகே விஏஓ அலுவலகத்தின் மேற்கூரை பகுதி சேதம்

 

திருமங்கலம் டிச. 8: திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தில், நேற்று முன்தினம் மேற்கூரையில் உள்ள காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் தாலுகாவின் எல்லையில் அமைந்துள்ள காங்கேயநத்தம் கிராமத்திற்குட்பட்டது எரம்பட்டி. இந்த இரு கிராமங்களுக்கும் சேர்ந்து, காங்கேயநத்தத்தில் விஏஓ அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக கட்டிடம் கட்டி 35 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் தனது பலத்தினை இழுந்து வருகிறது. அலுவலக மேற்கூரை சிதிலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த கட்டிடத்தில் பணியில் இருக்கும் விஏஓ, தலையாரி மற்றும் அலுவலகத்திற்கு பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விஏஓ வெள்ளைச்சாமி, தலையாரி சகானா மற்றும் பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தில் இருந்தனர். அப்போது அலுவலகத்தின் மேற்கூரை பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் விஏஓ மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

Related Stories: