ஸ்ரீபெரும்புதூர், டிச.8: சேலையில் தொட்டில் கட்டி விளையாடியபோது கழுத்து இறுகி சிறுவன் பலியான சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தேவி. கணவனை இழந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பெரியார் தெருவில் தனது 12 வயது மகன் அணில்குமாருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தேவி தனியார் தொழிற்சாலையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். அணில் குமாரை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, நேற்று அணில் குமார் சேலை மூலம் தொட்டில் கட்டி விளையாடி வந்ததாக தெரிகிறது. அப்போது ஊஞ்சலில் அமர்ந்து, ராட்டினம் போல் சுற்றி விளையாடிய நிலையில் எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி சிறுவன் கூச்சலிட்டபடி மயங்கினான். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அணில்குமாரை இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அணில்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
