கொடுத்த புகாருக்கு 4 நாளாகியும் நடவடிக்கை இல்லை அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

வத்தலக்குண்டு, ஜன. 13: நிலக்கோட்டை ஒன்றியம், ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பவுன்தாய் (32). தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். கடந்த 8ம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பவுன்தாய் பணியில் இருந்தார். அப்போது அங்கு துணை தலைவர் சிவராமனும், அவரது மகனும் தங்களது ஆதரவாளர்களுடன் சென்று பவுன்தாயை தகாத வார்த்தைகளாலும், சாதியை சொல்லியும் திட்டியும், கொலைமிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பவுன்தாய், ஊராட்சி செயலர் அன்றே தனித்தனியாக அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்த நிலையில் பவுன்தாய் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் நேற்று அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்தை கொட்டும் மழையில் முற்றுகையிட்டனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லாவண்யாவிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் டிஎஸ்பி முருகன் நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சுமார் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: