உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பு

உடுமலை, ஜன.13: திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உப்பாறு அணை உள்ளது. 572 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் 10 கிராமங்களில் உள்ள 6000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், உப்பாறு ஓடையின் இருபுறமும் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. விவசாயிகள் பெருமளவில் தென்னை, மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். பிஏபி திட்டத்தின் கசிவுநீர் அணையாக விளங்கும் உப்பாறு அணை வறண்டு காணப்படுகிறது. இதனால், கால்நடைகளுக்குகூட குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, உப்பாறு அணைக்க நீர் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, திருமூர்த்தி அணையில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள அரசூர் ஷட்டர் வழியாக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் வழித்தடத்தில் மொத்தம் 25 தடுப்பணைகள் உள்ளன. இவை அனைத்தும் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,`உப்பாறு அணைக்கு 5 நாட்கள், 400 கனஅடி நீர் வீதம் 2000  கனஅடி நீர் வழங்கப்படும்’ என்றனர். கடந்த ஆண்டும் இதேநாளில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: